விவசாய கேள்வி பதில்கள்-1 இயற்கை வேளாண்மை

green

இயற்கை வேளாண்மை

1. இயற்கை வேளாண்மை மூலம் அனைவருக்கும் போதுமான தானியங்களை உற்பத்தி செய்ய முடியுமா?

தரமான விதை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மையை கடைபிடிப்பதன் மூலம் வேளாண் உற்பத்தியை போதுமான அளவு அதிகரிக்க முடியும்.

2. இயற்கை வேளாண்மை மூலம் இயற்கைக்கு ஏதேனும் நன்மை உள்ளதா?

உள்ளது, இயற்கை உரங்களான மண்புழு உரம், கால்நடை எருக்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் பயன்படுத்துவதால் இரசாயன உரங்களின் பயன்பாடு குறைக்கப்படுகிறது. இதன் மூலம் இயற்கை வளம் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது.

3. இயற்கை வேளாண்மை மூலம் தரமான உணவு பொருட்கள் உற்பத்தி செய்ய முடியுமா?

இயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களின் பயன்பாடு மிகக் குறைவு. ஆகையால் இயற்கை வேளாண்மையில் உருவாக்கப்படும் பொருட்கள் மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கும்

4. விவசாயிகளுக்கு நல்ல முறையில் பயிர் செய்யும் வகையில் இயற்கை உரங்களை வழங்க முடியுமா?

கால்நடை உரங்கள், மட்கிய இலைகள், மட்கிய குப்பைகள் ஆகியவற்றை முறையாக சேகரித்து உபயோகித்தால் அனைத்து விவசாயிக்கும் நல்ல முறையில் பயிர் செய்யும் வகையில் இயற்கை உரங்கள் கிடைக்கும்.

இயற்கை வேளாண்மை பயிர்கள்:

நெல், கோதுமை, மக்காச்சோளம், பருப்பு வகைகள், கடலை, ஆமணக்கு, கடுகு, எள், பருத்தி, கரும்பு, இஞ்சி, மஞ்சள், மிளகாய், தேயிலை, வாழை, சப்போட்டா, பப்பாளி, தக்காளி, கத்தரி, வெள்ளரி போன்ற பயிர்கள் இயற்கை வேளாண்மைக்கு பொருத்தமானவை.இயற்கை வேளாண்மையில் உருவாக்கப்படும் பொருட்கள் சத்துள்ளதாகவும், தரமான வகையிலும் பயிர்களின் மதிப்பை உயர்த்தி அதன் தரத்தை மேம்படுத்தி காட்டுவதற்காகவும் இப் பொருட்கள் யாவும் பசுமை அங்காடிகள் மூலம் விற்கப்படுகின்றன.

மண் வளத்தை பாது காக்கும் வகையில் இயற்கை வேளாண்மையை என்பது காலத்தின் கட்டாயம் ஆகும் . இயற்கை வளங்களில் எதிர்கால சந்ததியினருக்கும் பங்கு உண்டு. அதற்கேற்ப இயற்கை வேளாண்மையினை குறித்து தற்போது விவசாயிகளுக்கு நல்ல முறையில் பரவலாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மீன் கழிவு ஒரு இயற்கை உரம் (மீன் அமினோ):

மீன் அமினோ மகசூலை அதிகரித்து மண்ணை வளப்படுத்தும் ஒரு பயனுள்ள விவசாய பயன்பாடு. மீன் அமினோ சத்து நிறைந்த உரமாக பயன்படுகிறது.மண்ணில் நீண்ட நெடுங்காலமாக வாழும் நுண்ணுயிர்கள் ராசாயனங்கள் மூலமாக சேதமடைந்திருக்கும், அதை பலப்படுத்தி மண்ணிற்கான ஊட்டத்தை சரிப்படுத்த உதவும் மீன் அமினோ.

மீன் கழிவுகளில் மிக அதிக அளவு தாவர வளர்ச்சிக்கான புரதம் அடங்கியுள்ளது. மீன் அமினோ தயாரிக்கும் வழிமுறை :

மீன் அல்லது மாமிச கழிவுகளை ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் பாதியளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். அதில் ஒரு கிலோ கழிவிற்கு 0.05 கிராம் முதல் 0.1 கிராம் பப்பாளி பால் சேர்க்க வேண்டும். நன்கு கலந்து 5 முதல் 8 மணி நேரம் வைக்க வேண்டும். இடையில் சம கால அளவில் ஓரிரு முறை கலக்கி விடவும். 8 மணி நேரத்திற்கு பின்னர் ஒரு கிலோ மீன் (எ) மாமிச கழிவில் 200கிராம் வெல்லத்தில் அரை லிட்டர் தண்ணீர் கலந்து சேர்க்க வேண்டும்.