Stevia -Sugar-substitute-சீனித்துளசி

stevia

சர்க்கரைத் துளசி Stevia rebaudiana

சீனித்துளசி! சர்க்கரை  நோயாளிகளுக்கு பயன்படும். இது சாதாரண சர்க்கரையைப் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் இதைப் பயன்படுத்தலாம். அதிக மடங்கு இனிப்புச் சுவையைத் தரும் செடி! பக்குவப்படுத்தப் பட்ட நிலையில் 200 மடங்கு அதிக இனிப்புச் சுவை கொண்டது. பக்க விளைவுகள் ஏற்படுத்தாத மூலிகை.

துளசியின் குணத்தோடு இருக்கும் இந்த செடியில் இனிப்பும் இருப்பதால் சீனித்துளசி என்று பெயர் ! இது, விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் பயிராகவும் இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் வருடத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் லாபத்தை தரும்.

இந்த சீனித் துளசியின் தாவரவியல் பெயர் ‘ஸ்டீவியா’.  இப்போது உலா அளவில் இதற்கான தேவை பெருகி வருவதால், இந்த செடியை பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல லாபம் காத்திருக்கிறது. 21 முதல் 38 டிகிரி சென்டி கிரேடு வரையுள்ள மிதமான வெப்பநிலை உள்ள எல்லா இடங்களிலும் நன்றாக செழித்து வளரும்.

காற்றில் ஓரளவு ஈரத்தன்மை இருக்கும் இடங்கள் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. தொடர்ந்து அதிக வெப்பமோ, அதிகக் குளிரோ இருந்தால் செடியின் வளர்ச்சி குன்றி, மகசூல் குறையும். மண்வளம் நன்றாக இருந்தால், மூன்று அடி உயரம் வரை வளரக்கூடிய சிறிய வகை செடி இது. இதில் நேரடியாக அதிக சூரிய ஒளி படக்கூடாது. குறிப்பாக, வெயில் அதிகம் கொளுத்தும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை. பொதுவாக, சுற்றுப் பகுதிகளில் உயரமான நிழல் தரும் மரங்களை வளர்ப்பதன் மூலம் இப்பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம்.

சீனித்துளசி சாகுபடி

சீனித்துளசி சாகுபடி செய்ய, நல்ல வடிகால் வசதிகொண்ட மணல் கலந்த செம்மண், வண்டல் மண் பூமி இருக்கவேண்டும். அதிகம் தண்ணீர் தேங்கும் களிமண், கடினமான மண் வகைகள் இதற்கு ஏற்றதல்ல’’ என்று சீனித்துளசிக்கான பொதுவான குணங்களைப் பற்றியும் பயிரிடும் முறைகளையும் சொன்னார்.

‘‘நிலத்தை நன்றாக உழுது ஒரு ஹெக்டேருக்கு 25 டன் தொழு எரு இட்டு, மண்ணை வளமாக்க வேண்டும். பாத்திகளை 45செ.மீ இடைவெளியில் அமைக்கவேண்டும். நன்றாக வளர்ந்த, சுமாராக ஆறு இஞ்ச் உயரமுள்ள நாற்றுகளை செடிக்கு 30-35 செ.மீ இடைவெளியிலும், வரிசைக்கு 45 செ.மீ இடை வெளியிலும் நடவேண்டும். ஒரு ஏக்கரில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் செடிகள் நடலாம். நான்கு நாட்கள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்சி வரவேண்டும். மண்ணில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். அதேநேரத்தில், மழைக்காலத்தில் நீர் தேங்காமல் நல்ல வடிகால் வசதியைச் செய்திருப்பதும் அவசியம்.

நாற்று நட்ட ஒரு மாதத்தில் களையெடுப்பது அவசி யம். செடிகள் வளர்ந்தவுடன் அடிப்பகுதியில் செடிகளைச் சுற்றி மண் அணைக்கவேண்டும். இப்படிச் செய்தால்தான் வேர் பகுதியில் ஈரப்பதம் தொடர்ந்து இருக்கும்.

செடியின் கிளை நுனியில் உருவாகும் மூக்குத்தி போன்ற வெள்ளை நிறப்பூக்களை அவ்வப்போது நீக்கினால்தான், இலையிலுள்ள இனிப்புத்தன்மை குறையாமல் இருக்கும். பூக்களைக் கிள்ளிவிடுவதால் மேலும் பல கிளைகள் உருவாகி, மகசூல் கூடும்.இந்தச் செடியை பூச்சிகள் மற்றும் நோய்கள் அதிகம் தாக்குவதில்லை என்பது சாதகமான விஷயம்.

நடவு செய்த 3, 4 மாதத்திலேயே அறுவடை செய்து விடலாம். தரை மட்டத்தில் இருந்து 10 செ.மீ உயரத்தில் அறுவடை செய்யவேண்டும். அப்போதுதான் அடுத் தடுத்த அறுவடைகளை இரண்டு முதல் மூன்று மாத இடைவெளியில் மேற்கொள்ளமுடியும். செடிகளை நட்டு அதிகபட்சம் மூன்று ஆண்டு வரை மகசூல் பார்க்கமுடியும். பறித்த இலைகளைத் தண்டிலிருந்து நீக்கி, நல்ல காற்றோட்டமுள்ள நிழலான இடத்தில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை உலர்த்தவேண்டும். ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 2 டன் முதல் 3 டன் வரை உலர் சீனித் துளசி கிடைக்கும்.

ஓசூருக்கு அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை என்ற ஊரில் பயிரிடப்படும் சீனித்துளசி குஜராத், ராஜஸ்தான், மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஓசூரைச் சேர்ந்த ‘குரோமோர் பயோடெக் லிமிடெட்’ என்ற அமைப்பின் இயக்குநர் பாரதியிடம் இதற்கான லாப வாய்ப்புகளைப் பற்றிக் கேட்டோம். ‘‘ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுகள், உரங்கள் வாங்குவது, சொட்டு நீர் பாசனத்துக்கான ஏற்பாடு செய்வது, அறுவடை செய்வது போன்ற செலவுகளுக்காக முதல் ஆண்டில் சுமாராக இரண்டரை லட்ச ரூபாய் தேவைப்படும். இதில் கிடைக்கும் வருமானம் என்று பார்த் தால் சுமாராக 4 லட்ச ரூபாய் கிடைக்கும். ஆக, லாபம் சுமாராக ஒன்றரை லட்ச ரூபாய்! இதுவே அடுத்த ஆண்டு பராமரிப்புச் செலவு என்ற வகையில் சுமாராக 80 ஆயிரம்தான் ஆகும். எனில், லாபம் மட்டுமே 3 லட்சத்துக்கு மேல் கிடைக்கும். அதற்கடுத்த ஆண்டும் இதே அளவு லாபம் கிடைக்கும். கணக்குப் போட்டுப் பார்த்தால் மூன்று ஆண்டுகளில் சுமார் நான்கு லட்ச ரூபாய் மட்டுமே லாபம் பார்க்க வாய்ப்புள்ள தொழில் இது’’ என்றார்

ஐந்து ஏக்கருக்கு குறையாத பரப்பில் இம்மூலிகை சாகுபடி செய்யும் விவசாயி அல்லது அமைப்பு, வங்கிக் கடன் பெறும் பட்சத்தில் மத்திய அரசின் தேசிய மருத்துவ மூலிகை வாரியத்திடமிருந்து மானியம் பெறமுடியும். வங்கிக் கடனில் 30% என்ற கணக்கில் அதிகபட்சமாக ஒன்பது லட்ச ரூபாய்வரை மானியம் கிடைக்கும். இதைப் பெறுவதற்கு பிராஜெக்ட் அறிக்கையுடன் தமிழக அரசின் தோட்டக்கலை துறையை அணுகவேண்டும். அவர்கள் அதை டெல்லிக்கு அனுப்பி, மானியம் பெற்றுத் தருவார்கள். இத்தொகை விவசாயி கடன் வாங்கிய வங்கிக்கு அனுப்பட்டுவிடும். அவர்கள் இதைக் கடன் தொகையில் கழித்துவிடுவார்கள்.

ஒருமுறை சாகுபடி செய்துவிட்டால், மறுமுறை விவசாயிகளே புதிய செடியை உருவாக்கிக்கொள்ள முடியும். தண்டுப் பகுதியிலிருந்து அதன் இலைகளை நீக்கிவிட்டு 3, 4 கணுக்கள் கொண்ட தண்டுப்பகுதியை பதியம்போட்டு வேர் பிடித்தவுடன் நடவுக்கு பயன்படுத்தவேண்டும். சாதாரணமாக இதனை 10, 20 சென்ட்டில்கூட சாகுபடி செய்யலாம்.

‘‘விவசாயிகளுக்கு நாற்றுகளைக் கொடுத்து, வளர்த்து அறுவடை செய்து உலர்த்தி தர ஒப்பந்தம் போடுகிறோம். கோயம்புத்தூர், பொள்ளாச்சி, சத்தியமங்கலம் போன்ற இடங்களில் விவசாயிகளிடம் ஒப்பந்தமுறையில் சீனித் துளசியை சாகுபடி செய்து கிலோவுக்கு 75 ரூபாய்க்கு குறையாமல் வாங்கிக்கொள்கிறோம். இதை மகளிர் சுய உதவி குழுக்களிடம் கொடுத்து பக்குவப்படுத்தி பொடி செய்து பாக்கெட் போட்டு விற்பனை செய்வதன் மூலம் லாபம் கிடைக்கிறது’’ தமிழகத்தில் ஓசூர், செங்கோட்டை, தென்காசி, குற்றாலம், ஏற்காடு, ஊட்டி போன்ற இடங்களில் சாகுபடி செய்வதற்கேற்ற சிறப்பான பயிர் இது!

Source thanks to : vikatan