நுண்ணூட்டங்களின் பயன்பாடு பற்றி தெரியுமா? Minerals – Tamil

நுண்ணூட்டங்களின் பயன்பாடு பற்றி தெரியுமா?

🌞 நாம் விவசாயத்தில் ரசாயன உரங்களுக்கு முன்னுரிமை அளித்து, இயற்கை உரங்களான பயிர் கழிவுகள், தொழு உரங்கள், பசுந்தழை உரங்கள் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளியதால், நமது நிலத்தில் நுண்ணூட்ட பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.

🌞 புதிய நீர்பாசன திட்டங்களின் விளைவு, பயிர் சுழற்சி இல்லாமை, மண் அரிமானம், நிலத்தினை சமப்படுத்தும் பொழுது மேல்மண்ணை அகற்றுதல், தொழுஉரம் அதிகம் இடப்படாமை சில வகையான சத்துக்களின் மிகுதியினால் ஏற்படும் சில சத்துக்களின் குறைபாடு, காலநிலை மற்றும் பயிர் வளர்ச்சி பருவம் போன்ற பல்வேறு காரணங்களால் பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றன.

🌞 நெல் பயிருக்கு 16 வகையான சத்துக்கள் தேவைப்படுகின்றன. நெல் பயிரில் பல மாவட்டங்களில் துத்தநாகம் மற்றும் தாமிரசத்து பற்றாக்குறை ஏற்பட்டு அது மகசூலை வெகுவாக பாதிக்கிறது என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நுண்ணூட்ட செயல்பாடு :

🌞 நுண்ணூட்ட சத்துகள், இலைகளின் வளர்ச்சியிலும் அதன் அமைப்பிலும் அதன் பச்சைய உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

🌞 நுண்ணூட்ட சத்துகள் குறைபாடு பயிரின் வளர்ச்சியை தடை செய்வதோடல்லாமல்பூபூக்காமலும், சூல் தரிக்காமலும் தடை ஏற்பட்டு நெல் மணி பிடிப்பது பாதிக்கப்படும்.

🌞 நுண்ணூட்டங்கள், நெல் பயிரில் ஒரு ஊக்கியாக செயல்பட்டு (என்சைம்கள் எனப்படும் நொதிப்பான்களை) சரியாக இயங்க உதவுகிறது.

🌞 நுண்ணூட்டங்கள் பேரூட்டங்களைப் போன்று பயிர்களின் சேமிப்பு பகுதிக்கோ அல்லது கூட்டமைப்பிற்கோ உதவுவதில்லை.

🌞 அதற்கு மாற்றாக இவை பயிர்களில் ஏற்படும் பலவித மெட்டபாலிக் செயல்பாடுகளுக்கு தேவைப்படுகின்றன. ஒவ்வொரு நுண்ணூட்டத்திற்கும் பயிரில் தனித்தனி வேலைகள் உள்ளன.

இரும்புச் சத்து :

🌞 பச்சையம் தயாரிக்கவும், மாவுப் பொருள் தயாரிக்கவும், பயிர் வளர்ச்சியின் போது ஏற்படும் வேதியியல் செயல்பாடுகளான ஆக்சிகரணம் போன்ற செயலுக்கும் இரும்பு சத்து தேவைப்படுகிறது.

துத்தநாக சத்து :

🌞 பயிர் வளர்ச்சிக்கு தேவைப்படும் பயிர் ஊக்கியான இன்டோல் அசிடிக் அமிலம் உற்பத்தியாகவும், பூ பூக்கவும், மொட்டு மலரவும், சூல் தரிக்கவும், நெல் மணி பிடிக்கவும், என்சைம்கள் இயங்கவும், நெற்பயிர் நீரை சீராக உறிஞ்சவும் தேவைப்படுகிறது.

தாமிர சத்து :

🌞 தாமிர சத்து பூ முழுமையாக பூக்கவும், சூல் தரிக்கவும், பால் பிடித்து முழுமையான விதை உண்டாகவும்
தேவைப்படுகின்றன. எனவே, இந்த நுண்ணூட்டம் பதரையும், சாவியையும் குறைக்கும்.

போரான் சத்து :

🌞 இலைகளில் தயாரிக்கப்பட்ட மாவுப்பொருளையும், சர்க்கரையையும், செடிகளின் மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்லவும், மொட்டு மலரவும், போரான் சத்து தேவைப்படுகிறது.

அறிகுறிகள் :

🌞 துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் நெற்பயிரின் அடிஇலைகளின் நரம்பு பகுதிக்கு இடைபட்ட பகுதி வெளுத்தும், பழுப்பு நிற புள்ளிகளும் கோடுகளும், நுணியிலிருந்து கீழ்நோக்கி ஏற்படும்.

🌞 இலைகளின் அளவு சுருங்கிவிடும். வளர்ச்சி குன்றி பயிர் கட்டையாகவும், புதர் போன்றும், கரைந்தும் குத்துகள் தென்படும். தூர் எண்ணிக்கை குறையும். பயிரை பார்ப்பதற்கு துரு பிடித்த இலையாக தெரியும். முடிவில் இலைகள் காய்ந்து பயிர் வளர்ச்சி நின்று விடும்.

🌞 வளர்ந்த நெல் பயிரில் சிறிய நெருக்கமான இலைகள், தூர்கள் பலகீனம், பூக்காத தூர் அல்லது பூத்த பின்பு பால் பிடிக்காத, மணி பிடிக்காத கதிர் அல்லது கதிரில் மணி இடைவெளி அதிகமாவும், சாவியான கதிர் முடிவில் மகசூல் பாதிப்பு ஏற்படும்.

🌞 தாமிர பற்றாக்குறையால் இலைக் குறுத்து சரிவர வெளிவராமலும், இலை மற்றும் கனுக்கள் சிறுத்தும், வாடியும், தண்டுப்பகுதி வெடிப்புற்றும் காணப்படும். இலைகளின் பக்கவாட்டில் இருபுறமும் பச்சையமின்றி வெளிரி காணப்படும்.

🌞 பற்றாக்குறை தீவிரமானால் இலைகள் துருபிடித்து கருகியது போன்று காட்சியளிக்கும். புதியதாக தோன்றும் இலைககள அகலம் குறுகி, நீண்டு, சுருண்டு, நுணி கூர்மையாகி உருண்டு ஊசிபோல் தோன்றும். இதனால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். வளர்ந்த பயிரில் பற்றாக்குறை தென்பட்டால் கதிர் பால் பிடிக்காமல் மலட்டுத்தன்மை ஏற்பட்டு மணிகள் சாவியாகி பதராகிவிடும்.

தரமான நெல் உற்பத்தி :

🌞 தக்கப்பூண்டு விதைத்து பூக்கும் சமயத்தில் மடக்கி உழுத பின்பு பயிர் செய்யலாம். பயிர் செய்த பிறகு ஒவ்வொரு முறை நீர் பாசனத்தின் போதும் மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் மற்றும் பஞ்சகாவ்யம் கலந்து விட வேண்டும்

🌞 வேளாண்மைத் துறையினால் சிபாரிசு செய்யப்படும் நுண்ணூட்டச் சத்துக்கள் அடங்கிய கலவையை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் 20 கிலோ மணல் கலந்து அல்லது தொழு உரத்துடன் கலந்து நடவு வயலில் பயிர் நடவுக்கு முன்பு மேலாக தூவி பின் நடவு செய்ய வேண்டும்.